UPI பேமென்ட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் Face அல்லது Fingerprint மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமல்!
டெல்லி: ஏ.டி.எம்., மற்றும் யு.பி.ஐ. மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி பின் நம்பர் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம், மற்றும் யு.பி.ஐ.யில் இனி முக அடையாளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகமாகிறது. முக அடையாள சரிபார்ப்பு முறையை வங்கி மற்றும் நிதித் துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி வழங்கியது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN மூலம் நிதி மோசடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் மோசடிகளை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது.