காஜியாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹரியான்வி சினிமா துறையை மையமாக கொண்டு வெளியாகும் படங்களில் நடித்து வருபவர் உத்தர் குமார். இவர் மீது கடந்த ஜூலை 18ஆம் தேதி 25 வயது இளம் பாடகி பாலியல் புகார் கொடுத்தார். அதில் 2020 ஜனவரி 1 முதல் 2023 ஜூலை 31 வரை தனக்கு சினிமாவில் வாய்ப்புகள் வாங்கித்தருவதாக கூறி உத்தர் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் உபி மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று மது அருந்தவும், திரைப்பட தயாரிப்பாளர்களிடம் நெருக்கமாக இருக்கவும் வற்புறுத்தினார்.
இதற்கு மறுத்த போது என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி கேட்ட போது திரைப்படத்துறையில் கருப்புபட்டியலில் சேர்த்து விடுவேன் என்று மிரட்டினார். சாதி அடிப்படையிலான கருத்துக்களை தெரிவித்தார். மேலும் எனது அந்தரங்க படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் என்று புகார் தெரிவித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காஜியாபாத் போலீசார் நடிகர் உத்தர்குமார் மீது பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் விதிகள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.