Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழப்பத்தில் உ.பி.

மக்களவை தேர்தலில் ஒரு கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்தை தரக்கூடியதாக உத்தரபிரதேச மாநிலம் விளங்குகிறது. 80 மக்களவை தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் பாஜ, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் மாறி மாறி கோலோச்சி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக பாஜவின் வசம் இம்மாநிலம் இருந்தது. யோகி ஆதித்யநாத்தை திறமையான முதல்வர் என்று கட்சி தலைமை முதல் அம்மாநில மக்கள் வரை தலையில் தூக்கிவைத்துகொண்டாடினர். ஆனால் தற்போது அவரது நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது.

சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் குழப்பத்தில் அம்மாநில அரசு தவிக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜ வெறும் 33 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. அயோத்தி கோயில் கட்டி பிரமாண்டமாக கும்பாபிஷேகம் செய்து உலகத்தையே உற்றுபார்க்க வைத்ததால் உத்தரபிரதேசத்தில் இந்துக்களின் வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என்று பாஜ தலைமை கணக்குபோட்டது.

இதனால் உ.பி.யில் பாஜ வெற்றி உறுதி என்று யோகி ஆதித்யநாத்தும் அதீத நம்பிக்கையில் இருந்துவிட்டார். ஆனால் அயோத்தியில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜ படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி தலைமை முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் அதிருப்தி அடைந்தது. உ.பி.யில் ஏற்பட்ட கடும் பின்னடைவால் ஒன்றிய பாஜவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சியும் அமைந்தது.

மக்களவை தேர்தல் தோல்வி குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் உ.பி. மாநில பாஜ தலைவர் பூேபந்திர சிங் சவுத்ரி தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தார். மாநில பாஜவினரின் அதிருப்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது திரும்பியது. பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கும் யோகியின் மீது அதிருப்தி இருந்தது. அதை அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இவை அனைத்தும் ஒன்று திரண்டு உ.பி. பாஜ ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா டெல்லியில் மேலிட தலைவர்களை சந்தித்த பிறகு தனது எக்ஸ் தள பதிவில், ‘ஆட்சியை விட கட்சி தான் மேலானது. லக்னோவில் எனது வீட்டு கதவு திறந்தே இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் மாற்றம் செய்யப்படுகிறதா அல்லது ஆட்சியில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பாஜ தொண்டர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவர்னர் ஆனந்திபென்னை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘மழைக்கால கூட்டத்தொடர் ஆபர், 100 பேரை கொண்டுவாருங்கள். ஆட்சி அமையுங்கள்’ என்று பதிவிட்டுள்ளது உ.பி. மாநில அரசியலில் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அகிலேஷ் யாதவின் கருத்துக்கு எதிராக பாஜ தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். பாஜவில் ஏற்பட்டுள்ள குழப்பம் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை தக்க வைத்துக்கொள்வாரா அல்லது வேறு யாருக்காவது வழிவிட்டு விலகுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.