கான்பூர்: உத்தரபிரதேச காவல்துறையின் துணை கண்காணிப்பாளராக ரிஷிகாந்த் சுக்லா பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை கான்பூரில் பணியாற்றியபோது போலி வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் நில அபகரிப்பு போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், குண்டராக இருந்து வழக்கறிஞராக மாறிய அகிலேஷ் துபேயுடன் சேர்ந்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரிஷிகாந்த் சுக்லா, மன்பூரி மாவட்டத்தில் வட்ட அதிகாரியாக இருந்தபோதும், மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், சுக்லா பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயர்களில் வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், ரிஷிகாந்த் சுக்லாவுக்கு சொந்தமாக ரூ.92 கோடி மற்றும் பான் கார்டுடன் இணைக்கப்பட்ட கூடுதல் சொத்துகள், மற்றும் முறையான ஆவணங்களின்றி ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் ரிஷிகாந்த் சுக்லாவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ரிஷிகாந்த் சுக்லா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
