வாரணாசி: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால வழியை திறக்க முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் இருந்து ஆகாசா நிறுவனத்தின் க்யூ-பி 1497 என்ற விமானம் நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் சென்று மேலெழும்ப தயாரானபோது, விமானத்தில் இருந்த சுஜித் சிங் என்ற பயணி திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே விமானம் ஓடுபாதைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. அங்கு விரைந்த பாதுகாப்பு பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கி விட்டு, சுஜித் சிங்கை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஜான்பூர் மாவட்டம் கவுரா பாட்ஷாபூர் பகுதியை சேர்ந்த அவர், ஆர்வ கோளாறு காரணமாக விமான அவசரகால வழியை திறந்தது” தெரிய வந்தது. இதையடுத்து சுஜித் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
+
Advertisement
