Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனித்துவமிக்க தலைவர் இன்று 100 வயதை தொடும் நல்லகண்ணு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழக அரசியல் வரலாற்றில் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) 100வது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற கே.ஜீவபாரதி அறிக்கை ஒன்றை வெளியி்ட்டுள்ளார். அறிக்கை விவரம் பின்வருமாறு: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 26.12.1925 அன்று 3வது குழந்தையாக நல்லகண்ணு பிறந்தார். கல்லூரியில் படிக்கிறபோது தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் மேடை முழக்கங்களும், அவருடைய வாழ்க்கை முறையும் நல்லகண்ணுவைப் பற்றிக் கொண்டது. அன்று கடைப்பிடிக்கத் தொடங்கிய எளிமைப் பண்பு இரா.நல்லகண்ணு இன்று 100-வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் போதும் தொடர்வது அவருடைய சிறப்பாகும்.

பொதுவுடைமை இலக்கியங்களும், இலக்கியப் பேராசான் ஜீவாவின் மேடை முழக்கங்களும் இரா.நல்லகண்ணுவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வந்தது. அதனால் அவரை கல்லூரிப் படிப்பைக் கைவிடச் செய்தது.

இரா.நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாளின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை மிகச் சிறந்த விழாவை எடுத்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரா.நல்லகண்ணுவைப் பற்றி என்ன பேசப் போகிறார் என்று கூடியிருந்த கூட்டம் டாக்டர் கலைஞர் மீது பார்வையையும்; அவருடைய வார்த்தைகளுக்காக செவிகளையும் பதித்தது. அப்போது டாக்டர் கலைஞர், “இங்கு ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேன்... என்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண்ணில் பார்வை இல்லை. ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் என்னுடைய பழுதுபட்ட கண்ணுக்குப் பதிலாக எனக்கு இரா.நல்லகண்ணு இருக்கிறார்” என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், இரா.நல்லகண்ணுவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதைக் கொடுத்து மகிழ்ந்தார். தந்தை முத்துவேல் கருணாநிதிக்கு எந்த வகையிலும் தான் சளைத்தவர் இல்லை என்பதற்குச் சான்றாக தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இரா.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதைக் கொடுத்து மகிழ்ந்தார். அப்போது அவர் கொடுத்த 10 லட்சத்துடன் தன்னுடைய சொந்தப் பணம் 5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.10,05,000ஐ மக்கள் நலப்பணிகளுக்குச் செலவிட தமிழக முதல்வரிடமே திருப்பிக் கொடுத்து கூடியிருந்தோரை அதிசயிக்கச் செய்தார் இரா.நல்லகண்ணு.நூறு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் இரா.நல்லகண்ணு நின்றாலும், அந்த நூறு பேரில் தனித்துவம் மிக்கவராகத் தெரிவார் இரா.நல்லகண்ணு. இன்று (26ம் தேதி) 100-வது வயதில் காலடி எடுத்துவைக்கும் இரா.நல்லகண்ணு, இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்குப் பொதுவாழ்வின் தூய்மையைச் சொல்லிக் கொண்டிருப்பார் என்பதே தமிழ் மக்களின் அவா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.