ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீதான நிலமோசடி புகார் எஸ்ஐடி விசாரிக்க அனுமதி: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமிக்கு எதிரான நில மோசடி புகாரை விசாரணை நடத்த மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு படை, விசாரணை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கர்நாடக முன்னாள் முதல்வரும் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சருமான எச்.டி.குமாரசாமிக்கு சொந்தமான பண்ணை தோட்டம், ராம்நகரம் மாவட்டம், பிடதி ஒன்றியம், கேதகானஹள்ளி கிராமத்தில் உள்ளது. பண்ணை தோட்டத்தை ஓட்டியுள்ள 14 ஏக்கர் அரசு நிலம், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக லோக்ஆயுக்தாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகாரை விசாரணை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், குமாரசாமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை விசாரணை நடத்திய நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதையேற்று பெங்களூரு மண்டல ஆணையர் அம்லான் ஆதித்ய பிஸ்வாஸ் தலைமையில் சிறப்பு விசாரணைப்படை (எஸ்ஐடி) அமைத்து கடந்த ஜனவரி 28ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. எஸ்ஐடி விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்தார். இதை எதிர்த்து மாநில அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அம்மனு நேற்று தலைமை நீதிபதி விபுபக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து, நில முறைகேடு புகாரில் குமாரசாமி மீதான புகாரை விசாரணை நடத்த மாநில அரசு அமைத்த எஸ்ஐடி விசாரணை நடத்த ஒருநபர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அரசு அமைத்த அமலன் ஆதித்யா பிஸ்வாஸ் தலைமையிலான புலனாய்வு படை விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.