சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கும் இருமொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி என்றால் தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா? தேசிய கல்விக் கொள்கைப்படி மூன்று மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, பட்டியலின, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடையாது.
தாய்மொழி வழிக் கல்வி கற்பிக்கப்படும் என்று மாநில கல்விக் கொள்கை கூறுவது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. காமராஜர் காலம் தொட்டு, தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை அதனை தானே வலியுறுத்துகிறது. நான் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும். தமிழில் பெயர் வைத்தால் மட்டும் அது மக்கள் பயன்பெறும் திட்டமாகி விடாது. மாநில கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் வெளியிட்டுள்ளதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.