சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘தீப ஒளித் திருநாள் என்று அனைவராலும் போற்றப்படும் தீபாவளிப் பண்டிகை, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் தீபாவளி குறிக்கிறது. ராமபிரான், ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து, அயோத்தி திரும்பிய நாளை தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுபடுத்தும் நாளாகவும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும். உங்கள் அனைவருக்கும், எனது மனமார்ந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.