ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன? இனி ‘முகமூடியார் பழனிசாமி’ என அழைக்கலாம், டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் வெளியே வரும் போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடி வரவேண்டிய அவசியம் என்ன என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாகவே அதிமுக கூட்டணியில் இருப்பதாக அறிவித்துவிட்டு டெல்லி சென்று விட்டார்.
இந்நிலையில் அமித்ஷாவை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிசாமி வெளியே வரும் பொழுது முகத்தை மூடிவிட்டு வருவதற்கு அவசியம் என்ன? இதுவரை எந்தவொரு கட்சி தலைவராவது டெல்லி சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது முகத்தை மூடிக்கொண்டு வருவார்களா? இதற்கு பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும். அதேபோல் பழனிசாமியுடன் காரில் இருந்த சென்னை தொழிலதிபரும் முகத்தை திருப்பி கொண்டார்.
அந்தகாலத்தில் புலவர்கள் மன்னர்களை ஏதாவது ஒரு சாதனை செய்தால் அவர்களை இன்று முதல் மன்னரை இவ்வாறு அழைக்கின்றோம் என்பார்கள். அதன்படி, இன்று முதல் முகத்தை மூடிவந்த பழனிசாமி ‘முகமூடியார் பழனிசாமி’ என அழைக்க வேண்டும். சிலர் எடப்பாடி பழனிசாமியை டான் என அழைத்தனர். அரசியல் தலைவராக இருந்தால் எப்படி முகத்தை மூடிக்கொண்டு வரமாட்டார்.
எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக. தொண்டர்களால் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது என்பது தான் அடிப்படை விதி. அதனை மாற்றியதால் இனி அது அதிமுக இல்லை. எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம் எனலாம். அதிமுக என்பது இப்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஏமாற்றி வருகிறார். எத்தனை கட்சிகள் கூட்டணி வந்தாலும் பழனிசாமி தோல்வி அடைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.