பாட்னா: ஒன்றிய அமைச்சரான சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பீகார் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் சரண் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சரும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், ‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று அவர் சூளுரைத்த நிலையில், அவரது லோக் ஜனசக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு, மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘டைகர் மெராஜ் இடிசி’ என்ற பெயரில் உள்ள பயனர் ஒருவர். சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டலை விடுத்துள்ளார். சிராக் பஸ்வானுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்ததின் காரணமாகவே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.