ஒன்றிய அரசுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டனர் அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுகவினர் குறை சொல்வதில் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: யுபிஎஸ்சி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கின்ற ஒரு பயிற்சி பள்ளியை இம்மாதம் 20ம்தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். ஒரே நேரத்தில் 84 பேர் அமர்ந்து பள்ளி படிப்பிற்கும், உயர் படிப்பிற்கும் தயாராவதற்கு உண்டான குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரே நேரத்தில் 60 பேர் யுபிஎஸ்சி மற்றும் பிற தேர்வுகளுக்கு அவர்களுக்குண்டான வகுப்பு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்த படைப்பகம் பயன்பாட்டிற்கு வரும்போது அதிக அளவு கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி அகாடமியில் படிப்பதற்கு சூழல் இல்லாதவர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ஜெகநாதன் சாலையில் இலவசமாக டயாலிசிஸ் சென்டர் தொடங்கப்பட உள்ளது. இதில் பிசியோதெரபி யூனிட்டும் ஏற்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் மிக மிக குறைந்த கட்டணத்தில் செயல்பாட்டில் கொண்டு வர முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த டயாலிசிஸ் சென்டர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுமொத்தமாக கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அவர்களது கல்வி மற்றும் மருத்துவ தேவை குறைந்த செலவில் அடைவதற்கு இதுபோன்ற திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். அந்த திட்டத்தின் முன்மாதிரிதான் பெரியார் நகர் அரசு மருத்துவமனை.
ஒட்டுமொத்தமாக தன்னிறைவு அடைந்த ஒரு தொகுதியாக கொளத்தூர் தொகுதியை மாற்றி வருகிறார் முதல்வர். எஸ்ஐஆருக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கிறார். பாஜவோடு, ஒன்றிய அரசோடு அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டவர்கள். எனவே, இதுபோன்று மக்கள் நலன் கருதிய இந்த முன்னெடுப்புகளை அவர்கள் குறை செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
   