Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் புதிய சட்டமசோதாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் புதிய சட்டமசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 130வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்ற தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பாஜ வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு, எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்.

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன். பிரதமருக்கு கீழான சர்வாதிகாரா நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் ஒன்றிய பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்து விட்டது.

தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பை களவாடியுள்ள பாஜ தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளை புனைந்து, எந்த விசாரணையும் தீர்ப்பும் இன்றியே, 30 நாட்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப்பிரிவுகளின் கீழ், அவர்களை ஆட்சியில் இருந்து பாஜக அகற்றவே இது வழி செய்கிறது.

குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும், வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசியலமைப்புக்கு புறம்பான இந்த சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும். மேலும், பல மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் உள்ள மாநில கட்சி தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது. எந்த சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளை கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தை தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்த சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது.