ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை ஒதுக்குவோம்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
சென்னை: சென்னை ஐ.ஐ.டி மற்றும் ‘திங்க் இந்தியா’ மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில், ‘தக்ஷிண பாதா மாநாடு’, இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கல்வி நிதி விவகாரம் தொடர்பாக தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்பி கனிமொழி என்னை சந்தித்தனர்.
அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் சமக்ர சிக்க்ஷா கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்கும். மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது. தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம்.
3வது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். ஒன்றிய அரசு எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தேசியக்கல்வி 3வது மொழியை ஊக்குவிக்கிறது. மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மாணவர்கள் 10 மொழிகள் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்கள் தான் இதனை பிரச்னையாக்குகின்றனர். நான் ஒடியா மொழியை சேர்ந்தவன். என் மொழியை நேசிக்கிறேன். ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கின்றேன். மொழியால் பிரிவினை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள். சமூகம் அதனைத் தாண்டி வளர்ந்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.