தமிழகத்தின் மின் உற்பத்தி, பகிர்மானத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரவேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தின் மின் உற்பத்தி, பகிர்மானத்திற்காக ஒன்றிய அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நேற்று மாநில மின்துறை அமைச்சர்களின் குழு கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு எரிசக்தித் துறையில் முன்னோடியாக பல முக்கிய சாதனைகளையும் சீர்திருத்த முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிர்மானத்திற்காக ரூ.2,00,000 கோடி முதலீடு தேவைப்படுகிறது.
இதற்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் புதிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 16வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்கத்தக்க, நம்பகமான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மின்பகிர்மானக் கழகங்களின் நிலைத்தன்மை, முதலீட்டுக்கான தயார் நிலை ஆகியவற்றின் புதிய சகாப்தத்தை கூட்டாக உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம். தமிழ்நாட்டின் எரிசக்தித் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.