20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின்: பதிவை புதுப்பிக்க 2 மடங்கு கட்டணம் உயர்வு: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
புதுடெல்லி: 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அவற்றின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு இருமடங்காக உயர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டது. அதில், 15 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக ரீதியான கனரக மற்றும் நடுத்தர வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை முறையே ரூ.18,000 மற்றும் ரூ.12,000 ஆக உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பரிந்துரைக்கு போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், வர்த்தக வாகனங்களுக்கான கட்டண உயர்வு முன்மொழிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி மற்றும் என்சிஆரில் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்தது. இந்த தடை விதித்து ஒரு வாரத்திற்குள், ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலான தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.
இதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலான இருசக்கர வாகனங்களின் பதிவைப் புதுப்பிக்க இனிமேல் ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல், 20 ஆண்டுகளைக் கடந்த கார்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிக்கும் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிஎஸ்-II மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களின் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.