Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அமைச்சரவை முடிவு 2030ல் காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்புதல்: அகமதாபாத் தேர்வு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரமதர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 2030ம் ஆண்டில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஏலத்தை சமர்பிப்பதற்கான ஒன்றிய இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக போட்டியை நடத்துவதற்கான ஆர்வத்தை தெரிவிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்த நிலையில், அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த அரங்கங்கள், அதிநவீன பயிற்சி கூடங்கள் இருப்பதால் காமன்வெல்த் போட்டிகளை நடத்த குஜராத்தின் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் குஜராத் அரசுக்கு தேவையான மானிய உதவி வழங்கப்படும். இந்த ஏலத்திற்கான விருப்பத்தை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். எனவே அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த செயல்முறையை இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதில் 72 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விளையாட்டு மட்டுமின்றி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்தியா கடைசியாக 2010ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது. இதுதவிர, சாலையோர வியாபாரிகள் நலனுக்கான பிஎம் ஸ்வநிதி திட்டத்தை ரூ.7,332 கோடி செலவில் 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரூ.12,328 கோடியில் கர்நாடகா, தெலங்கானா, பீகார் மற்றும் அசாமில் 3 ரயில் பாதைகளில் மல்டி டிராக்கிங் வசதியை ஏற்படுத்தவும், குஜராத்தின் கட்ச் பகுதியில் புதிய ரயில் வழித்தடம் அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.