Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி: தமிழக பாஜகவுக்கு புதிய மாநில தலைவர்

சென்னை: தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இதையடுத்து தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்பட உள்ளார். கடந்த முறை பாஜக ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த எல் முருகன், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று புதிதாக ஒன்றிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. இந்த அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சராக பதவியேற்க டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கும் ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது தான் விதியாக உள்ளது.

அண்ணாமலை ஒன்றிய அமைச்சர் ஆவதை தொடர்ந்து தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநில தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை. 2 மாதங்கள் கழித்து மாநில தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி யுள்ளது. புதிய சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன். தென்காசியை சேர்ந்த ஆனந்தன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த முறை தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். அவர் தோற்றாலும் மாநிலங்களவை எம்பியாக நீடித்து வருகிறார். இதனால், மீண்டும் அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை அவருக்கு ஒன்றிய அமைச்சர் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார். அவர் 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்ட உடன், ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும்.