Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் பட்டியல் தயாரிப்பு விவகாரம்; வாக்குச்சாவடி அதிகாரிகள் தற்கொலைக்கு தேர்தல் ஆணையமே காரணம்?.. ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கொடி

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அவையில் எழுப்ப வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் இன்று கூடித் தீவிர ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் 36 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் குறித்து விவாதிக்க ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர். தங்களது கட்சிக் கூட்டம் இருப்பதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு, தலைநகரில் நிலவும் மோசமான காற்று மாசு மற்றும் வெளியுறவுத் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது குறித்து அவர்கள் அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்விதத் திட்டமிடலும் இன்றி ஒருதலைப்பட்சமாக நடைபெறுவதாகவும், இதனால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன், உயிரிழந்த அலுவலர்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேர்தல் நடைமுறைகளைச் சீர்திருத்த வேண்டும் எனவும், இது குறித்து விளக்கம் அளிக்கத் தேர்தல் ஆணையத்தை நேரில் அழைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பீகாரில் முதற்கட்டப் பணிகள் முடிந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.