ஒன்றிய அரசு வழங்கியது போல அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்: அலுவலக உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில், அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எஸ்.மதுரம், கே.கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்றவாறு உடனடியாக பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அனைவருக்கும் அமுல்படுத்திட வேண்டும். ஒன்றிய அரசு வழங்கியது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றனர்.
