டெல்லி : அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி. கடந்த 2023-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், இந்தியா உலகின் 2-வது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இருந்தது, ஆண்டுக்கு சராசரியாக 68 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் வறட்சி காரணமாக 2023-2024-ம் ஆண்டில் அரசாங்கம் சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்தது.
கடந்த ஆண்டு 10 லட்சம் டன் மட்டுமே அனுமதித்தது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளின் நலன் தொடர்பாக சில கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்துக்கு பதில் அளித்த மத்திய அரசு, நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருந்தது.
அந்த பட்டியலில் வெல்லப்பாகுக்கான வரி நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லப்பாகுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2025-2026-ம் ஆண்டில் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பதாக மத்திய உணவு வினியோகத்துறை முதலமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

