டெல்டாவுக்கு வருகை தந்து ஆய்வு செய்தும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தாமல் ஒன்றிய அரசு நிராகரிப்பு
* நாகை மாவட்ட விவசாயிகள் அதிருப்தி
நாகப்பட்டினம் : குறுவை அறுவடை செய்த நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தாமல் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைகோடி மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கிய நிலையில் திடீரென பெய்த கனமழையால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அளவை காரணம் காட்டி கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்தனர். இருப்பினும் விவசாயிகள் போராடி குறுவை நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்தனர்.
இதற்கிடையில் முதல்வர் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சததமாக உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதன்பேரில் ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு வருகை தந்த 3 நாட்கள் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆனால் நெல்லின் ஈரப்பதம் தளர்த்தப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் மேட்டூர் அணை திறக்கும் தேதி அறிவிக்கும் போதே ஒன்றிய அரசு ஈரப்பதம் தளர்வு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து கடைமடை விவசாயிகள் கூறியதாவது:
அன்புவேலன்: கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்க காலதாமதத்தால் குறுவை பொய்த்துப்போனது. சம்பா அறுவடை மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி நடந்தது. ஆனால் அறுவடையின் போது கன மழை பெய்தது.
ஆனாலும் அறுவடை செய்த நெல் நனைந்துபோனதால் கொள்முதல் நிலையம் கொண்டு செல்வதற்கு முன் முன்பு பல முறை காயவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு முறை கொடுக்க வேண்டிய கூலி 3 முறை கொடுக்க வேண்டியது ஆனது.
விவசாயிகள் மீது அக்கரை கொண்ட முதல்வர் ஈரப்பதம் தளர்வு கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். இதன் பயனாக ஒன்றிய குழு டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தந்தது.
வழக்கம் போல் நெல் மாதிரிகளை எடுத்து சென்றது. காலம் கடந்தாலும் ஈரப்பதம் தளர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில் ஒன்றிய அரசு ஈரப்பதம் தளர்வு இல்லை எனக்கூறி விவசாயிகள் தலையில் கல்லை போட்டது.
இதே நிலை நீடித்தால் இனி வரும் காலங்களில் விவசாயிகள் விவசாய தொழிலை கைவிட்டு வேறு ஒரு தொழிலை நாடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே ஒன்றிய அரசு விவசாயிகள் நலனில் அக்கரை செலுத்த வேண்டும் என்றார்.
பாஸ்கரன்: ஒவ்வொரு முறையும் ஈரப்பதம் தளர்வு கோரி ஒன்றிய அரசிடம் கேட்பதை விட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பதம் அளவு 22 சதவீதம் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.



