தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி: உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு தீர்ப்பாயங்களுக்கான சீர்திருத்த சட்ட விதிகளை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பாய சீர்திருத்த சட்ட விதிகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயங்கள் சட்ட விதிமுறைகளின் அதிகார பிரிவு, நீதித்துறை சுதந்திர கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பாய உறுப்பினர்களின் ஓய்வு வயது 62 ஆக இருக்க வேண்டும். தலைவர்கள் ஓய்வு வயது 65 ஆக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்யும் விதமாக ஒன்றிய அரசு, இந்த சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீர்ப்பாயங்களின் செயல்பாடு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகளை சீர்குலைக்க ஒன்றிய அரசு மீண்டும், மீண்டும் முயற்சிக்கிறது என்று தீர்ப்பில் தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தீர்பாயங்களை மேற்பார்வையிட 4 மாதங்களுக்குள் தேசிய தீர்ப்பாய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் தீர்ப்பாய பிரச்சனைகளை கவனிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


