வேலையில்லா பிரச்னையை தீர்ப்பதற்கு எதுவும் செய்வதில்லை பிரதமர் மோடிக்கு எப்போதும் தேர்தல் மனநிலை: காங். விமர்சனம்
புதுடெல்லி: பிரதமர் மோடி வேலைவாய்ப்பின்மை பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக எப்போதும் தேர்தல் மனநிலையில் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளபதிவில், ‘‘ கடந்த 11 ஆண்டுகால தவறான ஆட்சி சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்துள்ளது. அதிகரித்து வரும் வேலையின்மை மிகவும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஆனால் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி எப்போதும் தேர்தல் மனநிலையில் தான் இருக்கிறார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொய் வாக்குறுதிகளை அளித்து பாகல்பூர் மற்றும் சீமாஞ்சல் பகுதியின் வளர்ச்சியை புறக்கணித்துள்ளது. பிரதமர் வருகை தரும் இந்த நேரத்தில் சில பொய் வாக்குறுதிகளை நினைவூட்ட விரும்புகிறோம்.
*2015ம் ஆண்டில் பாகல்பூரில் விக்ரம்ஷிலா மத்திய பல்கலைக்கழகத்தை ரூ.500கோடி செலவில் 500 ஏக்கரில் கட்டுவதாக பிரதமர் கூறினார். பத்து ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.
* 2015ம் ஆண்டில் பிரதமர் மோடி அடுத்த முறை வரும்போது மோதிஹாரி சர்க்கரை ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் குடிப்பேன் என்றார். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் இன்னும் தேநீருக்காக காத்திருக்கிறார்கள்.
*2020ம் ஆண்டில் தர்பங்கா எய்ம்ஸ்க்கு ரூ.1264கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இன்னும் கட்டிடம் கட்டப்படவில்லை. மருத்துவமனை செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
