வேலூரில் முக்கிய இடமான கிரீன் சர்க்கிள் பகுதியில் வடியாத மழைநீர்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்பு
வேலூர்: வேலூர் மாநகரின் முக்கிய இடமான கிரீன் சர்க்கிள் பகுதியில் தொடர்ந்து தேங்கியிருக்கும் மழைநீர் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி முதல் இன்று அதிகாலை வரை மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. வேலூரில் பெய்த மழையால் ஏற்கனவே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரின் அளவு இன்று அதிகரித்து பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கிரீன் சர்க்கிள் பகுதி முழுவதும் தண்ணீர் வடியாமல் தேங்கியே உள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு மேற்குபுறம் செல்லும் சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை கடும் அவதிக்குள்ளாக்கியது.
இருசக்கர வாகனங்களின் சைலன்ஸரில் தண்ணீர் புகுந்து திடீரென நின்றுபோவதால் அவற்றை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டனர். இங்கு ஏற்கனவே நடந்து வரும் சுரங்கப்பாதை பணியும், மழைநீர் வடிகால்வாய் பணியும் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தற்காலிக ஏற்பாடாக மோட்டார் வைத்து தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அல்லது ேதசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேலூர் சேண்பாக்கம், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், பாறைமேடு, திடீர் நகர், சமத் நகர், வசந்தபுரம், தொரப்பாடியில் காமராஜ் நகர், நேதாஜி நகர், ஜீவா நகர், கே.கே.நகர், அரியூர் அம்மையப்பன் நகர், காருண்யா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதுதவிர தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில் பகுதியை ஒட்டியுள்ள குறுகலான தெருக்களில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் மழைநீரும் புகுந்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. மாவட்டத்தில் தொடரும் மழையால் பாலாற்றில் அதன் உபநதிகளான கவுண்டன்யா, அகரம் உத்திரகாவேரி ஆறு, பொன்னை மற்றும் சிறிய கானாறுகள், ஓடைகள் மூலம் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் பாலாற்றில் 4 ஆயிரம் கனஅடிநீர் சென்று கொண்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி பதிவான மொத்த மழை அளவு 81 மி.மீ. சராசரி மழை அளவு 6.75 மி.மீ. மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலாலத்தூரில் 20 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில்: வேலூர் 5.20, சத்துவாச்சாரி 4.10, பேரணாம்பட்டு 2, திருவலம் 6.20, காட்பாடி 10.90, வடவிரிஞ்சிபுரம் 18.60, குடியாத்தம் 14.
தண்ணீர் நிரம்பி வரும் ஏரிகள்
வேலூர் மாவட்டம் கழிஞ்சூர், தாராபடவேடு, தொரப்பாடி ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 35 ஏரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகளில் 144 ஏரிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 ஏரிகளில் 19 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று மாவட்டங்களிலும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 196 ஏரிகள் முழுமையாகவும், 46 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும் 61 ஏரிகள் 51 முதல் 75 சதவீதம் வரையும், 147 ஏரிகள் 26 முதல் 50 சதவீதம் வரையும், 53 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.
அணைகளின் நிலவரம்
வேலூர் மாவட்டத்தின் முக்கிய அணையான ராஜாதோப்பு அணை அதன் கொள்ளளவான 37.72 அடி முழுமையாக நிரம்பி, அணைக்கு வரும் ஆயிரம் கனஅடி நீர் கவுண்டன்யா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மற்றொரு அணையான ராஜாதோப்பு அணை அதன் முழு கொள்ளளவான 24.57 அடியில் 22.96 அடி நிரம்பியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஓடை அணை அதன் கொள்ளளவான 112.2 அடி முழுமையாக நிரம்பி அணைக்கு வரும் 67.43 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.