Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.650 கோடியில் 903 ஏரிகள், 181 அணைக்கட்டுகள் புனரமைப்பு: 99 சதவீத பணிகள் முடிவடைந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக ரூ.649.55 கோடி மதிப்பீட்டில் 903 ஏரிகள், 181 அணைக்கட்டுகள் மற்றும் 37 கிணறுகளில் 99.6 சதவீதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண் நிலங்களுக்கு, பாசனம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கமானது தெரிவு செய்யப்பட்ட துணை வடிநிலங்களில் பாசன விவசாயத்தின் உற்பத்தி திறன் மற்றும் காலநிலை மாற்ற தாக்கத்தை தாங்கும் சக்தியை மேம்படுத்துதல், நீர் மேலாண்மையினை மேம்படுத்துதல், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தல் ஆகும்.

மேலும் நீர்வளத்துறை, வேளாண், கால்நடை, மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2024ம் ஆண்டிற்குள், 13.41 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களுக்கு பாசனத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, திட்ட பணிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டன. பல பணிகள் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து, இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.3336.64 கோடி ஆகும். தற்போது இந்த திட்டமானது நீர்வளத்துறை, தொடர்புடைய 6 துறைகள் மற்றும் மூன்று பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது. நீர்வளத்துறைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2292.48 கோடி.

இத்திட்டம் 47 துணை வடிநிலங்களில் 4.69 லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்பு பயன்பெறும் வகையில் ஏரிகள், அணைக்கட்டுகள், வரத்துக்கால்வாய்கள், கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மற்றும் செயற்கைமுறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பு, தற்செயல் அவசரகால நிவாரண கூறின் கீழ் வெள்ள பாதிப்புக்குள்ளான கட்டமைப்புகளின் நிரந்தர சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அதன்படி தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக ரூ.649.55 கோடி மதிப்பீட்டில் 903 ஏரிகள், 181 அணைக்கட்டுகள் மற்றும் 37 கிணறுகளில் 99.6 சதவீதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் 903 ஏரிகள் உள்பட ஏராளமான நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டதன் மூலம் விவசாயத்துக்கான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2024 வரை ஏழு ஆண்டு வரை தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்த்திற்கு கடந்த 2017ம் ஆண்டில் ரூ.2,962 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கியது. கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்த பணிகள் 2 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மே 2021ல் நடந்த இடைக்கால மதிப்பாய்வின் போது இந்த தொகை ரூ.3,249 கோடியாக திருத்தப்பட்டது. மேலும் 2023ம் ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மற்றும் புனரமைக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகள் சேதமடைந்தது.

இதை தொடர்ந்து கடந்த 2023ல் டிசம்பர் 22ம் தேதி உலக வங்கியானது தற்செயல் அவசரகால பதிலளிப்பு கூறாக பயன்படுத்த பரிந்துரைத்து, சேதத்தை கையாள ரூ.449.59 கோடி அனுமதித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரமளிக்கப்பட்ட குழு, இந்த திட்டத்தை 2026ம் ஆண்டு மே 31ம் தேதி வரை ஒரு ஆண்டு நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில் உலக வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த திட்டம் தற்போது டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்ட இதர பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி முதற்கட்டமாக 189.81 கோடி மதிப்பீட்டில் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள் மற்றும் 16 கிணறுகளின் 95 சதவீதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக ரூ.649.55 கோடி மதிப்பீட்டில் 16 உபவடி நிலங்களில் 903 ஏரிகள், 818 அணைக்கட்டுகள் மற்றும் 37 கிணறுகளில் 99.6 சதவீதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பணிகளின் செயலாக்கம்

இலக்கு முடிவுற்றவை

ஏரிகள் 2569 2473

அணைக்கட்டுகள் 355 344

கிணறுகள் 94 78

கால்வாய்கள்(கி.மீ) 4946 4879

* முடியும் தருவாயில் வெள்ள பாதிப்பு பணிகள்

தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக நிரந்தர சீரமைப்புக்கான 332 பணிகள் ரூ.449.59 கோடி செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 240 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 92 பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.