ஐநா: நியூயார்க்கில் நடந்து வரும் ஐநா பொதுச் சபையின் 80வது அமர்வு கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா உடன் நேற்று முன்தினம் ஐநா தலைமையகத்திற்கு வந்தார். இருவரும் எஸ்கலேட்டரில் கால் வைத்த உடனே திடீரென அது நின்று போனது. பின்னர் டிரம்ப், மெலனியா இருவரும் படிக்கட்டில் நடந்தே மேலே சென்றனர். இதைத் தொடர்ந்து, பொதுச் சபை அமர்வில் அதிபர் டிரம்ப் உரையாற்ற சென்ற போது, அங்கு டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. இதனால் பேப்பரில் எழுதி வைத்ததை பார்த்து டிரம்ப் வாசித்தார். தனது உரையிலேயே ஐநாவை வறுத்தெடுத்தார்.
இதற்கிடையே, ஐநா அளித்த விளக்கத்தில், ‘‘ எஸ்லேட்டரில் இருப்பவர்கள் தவறி விழுந்தாலோ அது தானாக நின்றுவிடும் தொழில்நுட்பம் கொண்டது. வீடியோகிராபர் பின்பக்கமாக நடந்ததால் அந்த தொழில்நுட்பம் காரணமாக எஸ்கலேட்டர் நின்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்றார். ஆனாலும் ‘‘எஸ்கலேட்டரை யாராவது வேண்டுமென்றே நிறுத்தியிருந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்’’ என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் எச்சரித்துள்ளார். ஐநாவுக்கு வழங்கிய நிதியை டிரம்ப் நிறுத்தியதால் எஸ்கலேட்டரையும் ஊழியர்கள் யாராவது நிறுத்தியிருக்கலாம் என்ற பத்திரிகை செய்தியையும் லீவிட் சுட்டிக்காட்டினார்.