புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜ எம்பிக்கள் தலைமையில் 2 பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக பாஜ எம்பிக்கள் தலைமையில் 2 பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜ எம்பி சவுத்ரி தலைமையிலான முதல் குழுவானது நாளை முதல் 14ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கும் ஐநா கூட்டத்தில் பங்கேற்கும்.
இந்த குழுவில் பாஜ எம்பிக்கள் அனில் பலுனி, நிஷிகாந்த் துபே மற்றும் உஜ்வால் நிகம், காங்கிரஸ் எம்பிக்கள் விவேக் தங்கா மற்றும் குமாரி செல்ஜா, சமாஜ்வாடி எம்பி ராஜீவ் ராய் மற்றும் ஆர்எஸ்பியின் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் மொத்தம் 15எம்பிக்கள் உள்ளனர். பாஜ எம்பி தக்குபதி புரந்தேஸ்வரி தலைமையிலான மற்றொரு குழுவானது வருகிற 27ம் தேதி முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளும். இந்த கூட்டத்தில் பாஜ எம்பிக்கள் விடி சர்மா, திலீப் சைகியா, ரேகா சர்மா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், திமுக எம்பி பி. வில்சன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மற்றும் ஆம் ஆத்மியின் சந்தீப் குமார் பதக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.