Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க இருந்த பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திடீர் ரத்து: 50% வரிவிதிப்பு, சீனா - ரஷ்யாவுடன் உறவால் அதிரடி முடிவு

நியூயார்க்: ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார். இந்தியாவுக்கு எதிரான 50% வரிவிதிப்பு, சீனா, ரஷ்யா உடனான இந்தியாவின் நட்பால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா உரையாற்றும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக செப்டம்பர் 23ம் தேதி உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடர், டிரம்பின் வர்த்தகப் போர், ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

மேலும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், செப்டம்பர் 24ம் தேதி பருவநிலை உச்சி மாநாட்டை நடத்தவுள்ளார். இதில் உலகத் தலைவர்கள் தங்களது புதிய தேசிய பருவநிலை செயல்திட்டங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1995ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டிற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உரையாற்றுவோர் பட்டியலில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட பட்டியலில், செப்டம்பர் 27ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, அமெரிக்கா தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்தது, அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதே கருத்தை கூறியது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தத்திற்கு அமெரிக்க போன்ற நாடுகளின் தலையீடு இல்லை என்று ஒன்றிய அரசு கூறியது ஆகியன அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. அதனால் இந்தியாவுக்கு எதிராக 50% இறக்குமதி வரிவிதித்தது. அதேநேரம் பாகிஸ்தானுக்கு 19% வரியை விதித்தது. இந்த நிலையில் சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கூட்டாக சந்தித்துக் கொண்டது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவில் விரிசல் மேலும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளதாக ஒன்றிய அரச வட்டாரங்கள் தெரிவித்தன.