ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மோதல்; பின்லேடன் உங்கள் நாட்டில் தான் கொல்லப்பட்டார்: பாகிஸ்தானை சரமாரியாக விளாசிய இஸ்ரேல்
தோஹா: அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்டேலன் உங்கள் மண்ணில் தான் கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் மாற்ற முடியாது என்று இஸ்ரேல் கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் வியாழன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் தூதர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானின் ஐநா தூதர் அசிம் இப்திகார் அகமது, ‘காசாவில் கொடூரமான ராணுவ நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறுகிறது. சிரியா, லெபனான், ஈரான் மற்றும் ஏமனில் மீண்டும், மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதல்கள் மூலமாக சர்வதேச சட்டத்தை மீறுகிறது’ என்று குற்றஞ்சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேன்சன், பாகிஸ்தான் தூதர் அகமதுவை நோக்கி கைகளை நீட்டி சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், ‘வௌிநாட்டு மண்ணில் ஒரு தீவிரவாதியை ஏன் குறிவைக்க வேண்டும் என்பது தான் கேட்கப்பட்ட கேள்வி அல்லவா? ஒரு தீவிரவாதிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கப்பட்டது? இன்றும் அதே கேள்வியை கேட்க வேண்டும். பின்லேடனுக்கு எந்த விலக்கும் இல்லை. ஹமாசுக்கும் விலக்கு அளிக்க முடியாது. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் ஒருபோதும் மாற்ற முடியாது’ என்றார்.
இதற்கு பதிலளித்த அகமது, ‘ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை தொடர்ச்சியாக மீறும் இஸ்ரேல் இந்த அறையை துஷ்பிரயோகம் செய்து கவுன்சிலின் புனிதத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் இது அபத்தமானது. மற்றவர்களை நோக்கி கை நீட்டி பேசுவது இது முதல் முறை அல்ல’ என்றார்.