நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா உள்பட 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ஹரீஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்; 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள். இந்த தேர்வு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஈடுஇணையற்ற ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது. எங்களுடைய பதவி காலத்தில் இந்த நோக்கத்திற்காக செயலாற்ற நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
இதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதன்படி, 2026 முதல் 2028 வரையிலான 3 ஆண்டு காலகட்டத்திற்கு மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலில் சேவையாற்றும். பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் சேர்த்துள்ளதுடன், மனித உரிமைகளுக்காக விரிவான அணுகுமுறைகளை ஐ.நா. கவுன்சிலில் இந்தியா சமர்ப்பித்து வருகிறது.