காசா நகரில் தரைவழித் தாக்குதல் தீவிரம்; ஐ.நா மனித உரிமை ஆணையம் ஹமாசின் பினாமி; இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் பதிலடி
காசா: ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இஸ்ரேல், காசா மீதான தனது தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன பகுதிகளில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான சர்வதேச ஆணையம், நேற்று தனது விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யும் நோக்குடன் செயல்படுகின்றனர்.
இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து குற்றங்களில், பாலஸ்தீனர்களைக் கொல்வது, அவர்களுக்குக் கடுமையான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது, திட்டமிட்டு இயல்பு வாழ்க்கையை அழிக்கும் சூழலை உருவாக்குவது, பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் திணிப்பது ஆகிய நான்கு குற்றங்களை இஸ்ரேல் செய்துள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வெறுப்புப் பேச்சுகளே இனப்படுகொலை நோக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையின் முடிவுகளை முழுமையாக நிராகரித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இது திரிக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான தகவல் என்றும், இந்த ஆணையம் ஹமாஸின் பினாமியாகச் செயல்படுவதாகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களிலேயே, இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மீது தனது தரைவழித் தாக்குதலை நடத்தியது. வாரக்கணக்கில் தொடர்ந்த வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தற்போது டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் காசா நகருக்குள் நுழைந்துள்ளனர். இரவு முழுவதும் தொடர்ந்த குண்டுமழை நரகத்தைப் போல் இருந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். ஹமாஸின் கடைசி முக்கிய கோட்டையாகக் கருதும் காசா நகரைக் கைப்பற்றும் இந்த நடவடிக்கை, பல மாதங்கள் வரை நீடிக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ராணுவத்தின் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து, ஏற்கெனவே பலமுறை இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்குப் பகுதியை நோக்கி மீண்டும் தப்பிச் செல்கின்றனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், அமெரிக்கா ஐ.நா.வின் அறிக்கையை நிராகரித்து, இஸ்ரேலுக்குத் தற்காப்பு உரிமை உண்டு எனத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தி அப்பாவி மக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் அவசரமாகத் தலையிட வேண்டும் என பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் தீவிரமடைந்தால், குழந்தைகளின் துன்பம் பன்மடங்கு பெருகும் என யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது.