விழுப்புரம் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், திண்டிவனம், கண்டாச்சிபுரம் ஆகிய 4 தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களாக கருதி அந்தோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தற்போது உள்ள என்பிஎச்எச் மற்றும் பிஎச்எச் ரேஷன் கார்டுகளை ஏஏஒய் ரேஷன் கார்டுகளாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் இலவச குடிமனை பட்டாவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய தலைவர்கள் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் தாசில்தார் கனிமொழி விரைந்து வந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.