உக்ரைன் போரில் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்... ரஷ்ய எண்ணெய்க்கான ‘சலவை கூடம்’ இந்தியா: கெடுவுக்கு பின் மீண்டும் வரிவிதிக்க டிரம்ப் முடிவு
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் காரணமாக, ரஷ்யா தனது கச்சா எண்ணெயை, சலுகை விலையில் விற்கத் தொடங்கியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்த உதவுமாறு அமெரிக்காவே கேட்டுக்கொண்டதன் பேரில், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், இந்தியா வர்த்தகத்தில் தங்களை ஏமாற்றுவதாகவும், அதிக வரிகளை விதிப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
அதன் ஒருபகுதியாக இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து மொத்தமாக 50% வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியாவை ரஷ்ய எண்ணெய்க்கான ‘சலவை கூடம்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியா எங்களிடமிருந்து பெறும் பணத்தைக் கொண்டு, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது; அதை சுத்திகரித்து பெரும் லாபம் பார்க்கிறது.
ஆனால், அந்தப் பணத்தைக் கொண்டு ரஷ்யா ஆயுதங்களைத் தயாரித்து உக்ரைனியர்களைக் கொல்கிறது. இதுவொரு பைத்தியக்காரத்தனமான செயல். வரும் 27ம் தேதிக்குள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. அமைதிக்கான பாதை இந்தியாவின் வழியாகவே செல்கிறது. எனவே ரஷ்யாவின் பொருளாதார உயிர்நாடியாக இந்தியா இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.