கீவ்: உக்ரைனில் பயணிகள் ரயில்கள் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனில் உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, நேற்று பயணிகள் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எல்லையில் இருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியான ஸோஸ்ட்காவில் 2 பயணிகள் ரயில்களை ரஷ்ய டிரோன்கள் தாக்கியதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். இதில் குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரயில்வே ஊழியர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக உக்ரைன் தேசிய ரயில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் செர்னிவ் நகரில் மின் உற்பத்தி மையத்தில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.