உக்ரைன் மீதான உத்தி குறித்து பிரதமர் மோடி அதிபர் புடினிடம் கேட்டதாக கூறுவது ஆதாரமற்றது: இந்தியா மறுப்பு
புதுடெல்லி: நியூயார்க்கில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே பேட்டி ஒன்றில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியா மீதான வரிகள் ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்திய பிரதமர் மோடி, ‘‘அதிபர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன் மீதான உத்தி குறித்து கேட்டுள்ளார்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மார்க் ருட்டே கருத்துக்களை வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் மறுத்துள்ளார்.
இது ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘நேட்டோ தலைவரின் அறிக்கை உண்மையில் தவறானது மற்றும் முற்றிலும் ஆதாரமற்றது. பிரதமர் மோடியின் ஈடுபாடுகளை தவறாக சித்தரிக்கும் அல்லது ஒருபோதும் நடக்காத உரையாடல்களை குறிக்கும் ஊகங்கள் அல்லது கவனக்குறைவான கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் மோடி அதிபர் புடினுடன் அவர் கூறிய விதத்தில் பேசியதில்லை. அத்தகைய உரையாடல்கள் எதுவும் நடக்கவில்லை. நேட்டோ போன்ற ஒரு முக்கிய அமைப்பின் தலைவர் பொது அறிக்கைகளில் அதிக பொறுப்புடன் இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
* அமெரிக்காவில் இருந்து 2417 பேர் நாடு கடத்தல்
வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தியா சட்டவிரோத இடம்பெயர்வுக்கு எதிராக நிற்கிறது. மக்களின் சட்டப்பூர்வ நடமாட்டத்திற்கான வழிகளை ஊக்குவிக்க விரும்புகின்றது” என்றார்.