Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியுடன், இங்கி. பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு ரூ.4318 கோடிக்கு ஏவுகணை வாங்க ஒப்பந்தம்: இந்தியா- இங்கிலாந்து இடையே கையெழுத்து

மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையே ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் இங்கிலாந்து தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மும்பையில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் சிஇஓ மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, \” உலகம் உறுதியற்ற தன்மையை காணும் நேரத்தில் இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தமானது ஸ்திரதன்மையை வழங்கும்.

இன்று இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம் 56பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2030ம் ஆண்டு திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே அதனை இரட்டிப்பாக்கும் இலக்கு அடையப்படும் என்று நம்புகிறேன். இந்தியா -இங்கிலாந்து இடையேயான சுதந்திர ஒப்பந்தமானது சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். இந்தியாவின் திறமை மற்றும் அளவுகோல் மற்றும் இங்கிலாந்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிபுணத்துவம் ஆகியவற்றின் கலவையானது சிறந்த முடிவுகளைத் தரும்.

இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் கூட்டாளராக இருப்பதற்கு இங்கிலாந்தை நான் அழைக்கிறேன். இந்தியாவில் இங்கிலாந்து ஒன்பது பல்கலைக்கழக வளாகங்களை திறக்கும். வரும் காலங்களில் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டாண்மையானது இரு நாடுகளின் புதுமைப் பொருளாதாரத்தை இயக்கும்\” என்றார். தொடர்ந்து ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவுக்கு குறைந்த எடை கொண்ட பல்திறன் ஏவுகணைகளை இங்கிலாந்து சப்ளை செய்யும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் அதிகரிக்கும் என்றும், ஆத்மநிர்பார் பாரதத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

* 9 பல்கலைகள் எவை?

இங்கிலாந்தின் 9 முன்னணி பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் அமைக்க உள்ளன. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஏற்கனவே அரியானாவின் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது. லிவர்பூல் பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைய உள்ளது. யார்க் பல்கலைக்கழகம், அபெர்டீன் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் ஆகியவை மும்பையில் வளாகங்களைத் திறக்க உள்ளன. மேலும் லான்ஸ்காஸ்டர், சர்ரே பல்கலைக்கழகங்கள் வளாகங்களை அமைக்க உள்ளன.