Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்து உளவுத் துறைக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்..!!

லண்டன்: இங்கிலாந்து உளவுத் துறையின் MI6க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்று MI6. இது இங்கிலாந்தின் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனமாகும். இது தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும் வெளியுறவுக் கொள்கையை ஆதரிப்பதிலும் மேலும் அது தொடர்பான தகல்களைச் சேகரிப்பதும் கவனம் செலுத்தி வருகிறது.1909இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, உலகம் முழுவதும் ரகசியமாக இயங்குகிறது மற்றும் வெளியுறவுச் செயலாளருக்கு அறிக்கை செய்கிறது. பயங்கரவாதம், சைபர் தாக்குதல்கள் மற்றும் விரோத நாடுகள் போன்ற அச்சுறுத்தல்களில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

தற்போது இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இங்கிலாந்துக்கு அதிகளவில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை கண்காணிக்க நாட்டின் உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் MI6 என்ற உளவுப்பிரிவு தலைவராக பிளேஸ் மெட்ரெவேலி நியமிக்கப்பட்டு உள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உளவுப்பிரிவுக்கு 116 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும். நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியுறவுத்துறை மந்திரியிடம் பிளேஸ் மெட்ரெவேலி நேரடியாக அறிக்கை சமர்ப்பிப்பார்.

அவர் தற்போது இயக்குநர் ஜெனரல் 'Q' ஆக பணியாற்றுகிறார். MI6இல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேற்பார்வையிடுகிறார். அவர் முன்பு MI5இல் ஒரு பெரிய பதவியை வகித்தார். உள்நாட்டு உளவுத்துறை நிறுவனமான MI5 முன்பு ஸ்டெல்லா ரிமிங்டன் மற்றும் எலிசா மன்னிங்ஹாம்-புல்லர் ஆகிய இரண்டு பெண் தலைவர்களைக் கொண்டிருந்தாலும், மெட்ரெவேலி MI6ஐ வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் 1999-ம் ஆண்டு புலனாய்வுத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.