யுஇஎப்ஏ மகளிர் கால்பந்து; ஜெர்மனி அணியை வீழ்த்தி ஸ்பெயின் மீண்டும் சாம்பியன்: 70,000 ரசிகர்கள் கொண்டாட்டம்
மாட்ரிட்: யுஇஎப்ஏ மகளிர் தேசிய லீக் கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. யுஇஎப்ஏ கால்பந்து போட்டிகள், ஐரோப்பாவை சேர்ந்த சீனியர் மகளிர் தேசிய அணிகள் இடையில் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளை ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான யுஇஎப்ஏ நடத்துகிறது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்-ஜெர்மனி நாடுகளை சேர்ந்த மகளிர் அணிகள் தகுதி பெற்றிருந்தன.
இந்த அணிகள் இடையே, கெய்சர்ஸ்டாடெர்ன் நகரில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரி சமமாக மோதியதால் கோல் போட முடியாமல் டிராவில் முடிந்தது. அதையடுத்து, இறுதிச் சுற்றின் 2வது போட்டி, மாட்ரிட் நகரில் நடந்தது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்பெயின், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த இப்போட்டியை, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

