உடுமலை அருகே தந்தை-மகன்கள் மோதலை விசாரிக்க சென்றபோது அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்எஸ்ஐ வெட்டிக்கொலை: டிஜிபி நேரில் அஞ்சலி; 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்
உடுமலை: உடுமலை அருகே தந்தை-மகன்கள் மோதலை விசாரிக்க சென்றபோது அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்எஸ்ஐ வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலுக்கு டிஜிபி அஞ்சலி செலுத்தினார். பின்னர், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ உடல் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த தங்கப்பாண்டியன் (32) தனது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தை மூர்த்தி (65) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் தனது மனைவி, மகளுடன் தந்தை மற்றும் சகோதரனை பார்க்க சிக்கனூத்துக்கு வந்துள்ளார். இரவில் தந்தை, இரு மகன்களுக்கிடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடிமங்கலம் காவல்துறைக்கு போனில் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேசனில் இருந்து நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் (58)க்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, ஆயுதப்படை காவலர் அழகு ராஜாவுடன் தோட்டத்திற்கு ரோந்து ஜீப்பில் சென்றுள்ளார். நள்ளிரவில் மகனால் தாக்கப்பட்ட தந்தை மூர்த்தியை ரத்த காயத்துடன் கண்ட, சிறப்பு எஸ்எஸ்ஐ அவரை மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்புவதற்காக 108 ஆம்புலன்சை அழைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சண்முகவேலுவை நெற்றி மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். மேலும், தோட்டத்து மேலாளர் கனகராஜ், தோட்ட கூலித் தொழிலாளர் இருவரையும், ஆயுதப்படை காவலர் அழகுராஜாவையும் மணிகண்டன் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார்.
அனைவரும் மணிகண்டனின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தோட்டத்தை விட்டு ஓடினர்.சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஆயுதப்படை காவலர் அழகுராஜா காவல் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, எஸ்எஸ்ஐ ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மூர்த்தி, தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து கோவை மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், திருப்பூர் எஸ்பி யாதவ் க்ரிஷ் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எஸ்.எஸ்.ஐ சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தவிசாரணை நடத்தினர். இந்த கொடூர கொலை குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை குடும்பத்தினரிடம் எஸ்.எஸ்.ஐ உடல் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு தமிழக காவல்துறை தலைவர் சங்கர்ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்.பி க்ரீஸ் யாதவ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடுமலையில் உள்ள மின் மாயனத்திற்கு கொண்டு எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் வரப்பட்டது.
அப்போது ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி., டிஐஜி, மாவட்ட எஸ்.பி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு எஸ்எஸ்ஐயின் உடன் தகனம் செய்யப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட சண்முகவேல் உடுமலையில் தாராபுரம் ரோடு இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி. தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தல் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். மகன் லலித்குமார், மகள் சந்தியா. இருவருக்கும் திருமணமாகி விட்டது.
* கொலையாளிகள் போலீசில் சரண்
எஸ்எஸ்ஐயை வெட்டி கொன்ற வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மூத்த மகன் தங்கப்பாண்டி (32) ஆகியோர் திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். இருவரையும் மேல் விசாரணைக்காக உடுமலைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்
* எஸ்.ஐ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (57) மற்றும் ஆயுதப்படை காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்னை குறித்து தகவல் அறிந்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்கு சென்றபோது அடிதடி பிரச்னையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* எஸ்எஸ்ஐ உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மறைவு வருந்தத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தீவிரமான முறையில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சண்முகவேலுவின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்து முதல்வர் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்’ என்றார்.
* சம்பவ இடத்தில் ஏடிஜிபி விசாரணை
எஸ்எஸ்ஐ சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட உடுமலை அடுத்துள்ள சிக்கனூத்து கிராமத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தென்னந்தோப்பிற்கு நேற்று மாலை தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கொலை செய்யப்பட்ட இடம், கொலையாளிகள் வசித்து வந்த வீடு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். மேலும் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
* போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு- அதிமுக எம்எல்ஏ
தோட்ட உரிமையாளரான அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தோட்டத்தை நேரடியாக நான் கண்காணிப்பதில்லை. எனது மேலாளர்கள் தான் கவனித்து வருகிறார்கள். இதில் மூர்த்தி கடந்த 3 வருடமாக தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் தங்கபாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு வேலைக்கு வந்துள்ளார். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனை கண்ட மற்ற நபர்கள் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்னையை சமரசம் செய்து இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மறைந்திருந்த நபர் வந்து கடுமையான முறையில் சண்முகவேலுவை வெட்டி கொலை செய்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. இது எதிர்பாராமல் நடைபெற்ற ஒரு விபத்து. உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நல்ல ஒரு மனிதர். சிறந்த அதிகாரி.
காவல்துறையினரின் விசாரணைக்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடும்பத்தினரின் ஆதார் விவரங்கள் தொலைபேசி எண்கள், அவர்களை தோட்டத்து வேலைக்கு சேர்த்து விட்ட நபர்களின் விவரங்கள் உள்ளிட்டவை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். ஒரு நேர்மையான அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கக்கூடிய நிலையில் அவரது மகன் லலித் குமார் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.அவருக்கு அரசு உடனடியாக அரசு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
* உயிரை காப்பாற்ற 4 கி.மீ ஓடிய போலீஸ்
சிறப்பு எஸ்.ஐயை அழைத்து சென்ற போலீஸ் ஜீப் ஓட்டுனர் சிறப்பு எஸ்.ஐயை வெட்டியதை பார்ததும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சம்பவ இடத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு ஓடி சென்று அங்கிருந்த சக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
* ஒரு கோடிக்கான காசோலை வழங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ சண்முகவேலுவின் மனைவி உமாமகேஸ்வரி, மகன் லக்சித்குமார், மகள் சந்தியா ஆகியோரிடம் டிஜிபி சங்கர்ஜிவால் ரூ.1 கோடிக்கான நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.
* கொலையாளிகளுக்கு உரிய தண்டனை: - டிஜிபி உறுதி
எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் டிஜிபி சங்கர்ஜிவால், அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறியதோடு கொலையாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் சண்முவேலுவின் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர்.