விடுபட்ட மகளிருக்கும் வெகு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் ரூ.254 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், "அடக்குமுறைதான் ஒன்றிய பாஜக அரசின் அடையாளம்; அடிமைத்தனம்தான் அதிமுக ஆட்சியின் அடையாளம். திராவிட மாடல் ஆட்சியின் அடையாளமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் உள்ளது. காலை உணவு திட்டத்தை பஞ்சாப் மாநிலத்திலும் தொடங்கப் போவதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இங்கு வந்தபோது பெருமையுடன் கூறினார். இப்படி மற்ற முதலமைச்சர்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடும், நம்முடைய அரசும் இருக்கிறது.
எங்களுடைய Brand Ambassador முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் அரசுக்கு Brand Ambassadors-களாக மக்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை உங்களுடைய நண்பர்கள், குடும்ப உறவினர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 2026 தேர்தலில் மீண்டும் கழக ஆட்சிதான் அமையும்.
1 கோடியே 15 லட்சம் மகளிர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 பெற்று வருகிறார்கள். விடுபட்ட மகளிருக்கும் வெகு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை நான் உறுதியுடன் சொல்கிறேன்,"இவ்வாறு தெரிவித்தார்.