உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைஞர் மாணவ பத்திரிகையாளர் கலைஞர் நிதிநல்கை திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலைஞரின் நினைவு நாளையொட்டி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட்டு, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களை வெளியிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளான நேற்றையதினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பெற்றுக்கொண்டார். மேலும், கலைஞர் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தின் இணைய தளமும் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இளம் தலைமுறையினர் சிறந்த பத்திரிகையாளராக பயிற்சி பெறவும், திராவிட இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் தொண்டாற்றிட வழிகாட்டியாகவும் விளங்கும். அதைத்தொடர்ந்து, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பின்னர், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தியாகமறவர்’ சி.சிட்டிபாபு தொகுத்த “திமுக வரலாறு”, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!’-இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கட்டுரைகள், முனைவர் இரா.சபாபதி மோகன் எழுதிய “மாநில சுயாட்சி முழக்கம்”, கோவி.லெனின் எழுதிய “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, தமிழன் பிரசன்னா எழுதிய “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, சூர்யா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, சு.விஜயபாஸ்கர் எழுதிய “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய எட்டு புதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், தலைமைக்கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் நிர்வாகி நீரை மகேந்திரன், மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் மனைவி காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.