அறிவு திருவிழாவை நடத்தி 4 நாட்களுக்குப் பின் யாரை கேட்டு, எதற்காக நடத்தினீர்கள் என்று கேட்கிறார்கள்: அறிவு இருப்பவன் அறிவு திருவிழா நடத்துகிறான்; நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞர் அணியின் திமுக 75 அறிவு திருவிழா நிறைவு விழா நடந்தது. விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முற்போக்கு புத்தகக்காட்சியில் பங்கேற்ற பதிப்பாளர்கள், அறிவுத் திருவிழாவின் வெற்றிக்கு தங்கள் உழைப்பைச் செலுத்திய அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இளைஞர்களின் அறிவைப் பெருக்க வேண்டும், ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று நாம் இவ்வளவு வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாட்டில் சில பேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்களின் தொண்டர்கள் அறிவாளிகளாக இருப்பதை, அவர்களின் தலைவர்களே விரும்புவதில்லை. தன் தொண்டர்களுக்கு அரசியல் அறிவும்-தெளிவும் வந்துவிட்டால், அவர்களால் இனி அரசியலே நடத்த முடியாது என்று தலைவர்கள் பயப்படுகிறார்கள்.
உதாரணத்துக்கு அதிமுகவை எடுத்து கொள்ளுங்கள். மக்கள் இன்றைக்கு எடப்பாடியை பார்த்து கேட்கிற கேள்விகளை எல்லாம், அதிமுகவின் தொண்டர்கள் நாளை அவர்களின் தலைவரை பார்த்து கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பாஜவுக்கு அடிமையாக ஆகிவிட்டோமே ஏன் என்று எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து அ.தி.மு.க. தொண்டர்கள் கேள்வி கேட்பார்கள். அதனால்தான் அதிமுக தொண்டர்களுக்கு கொள்கை எதுவும் தெரியக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அதிமுக தொண்டர்களுக்கு கொள்கை தெரியாமல் இருந்தால்கூட பரவாயில்லை. எடப்பாடி பழனிசாமிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது. அவர் படித்த அந்த ஒரு புத்தகத்தை நானும் தேடுகிறேன், இதுவரை எங்கேயும் கிடைக்கவில்லை. அவர் படித்த ஒரே புத்தகம் சேக்கிழார் எழுதிய ராமாயணம் மட்டும் தான்.
அதிமுக தான் அப்படியென்றால், இன்னும் சில கும்பல்கள் இருக்கின்றன. நாம் அறிவுத் திருவிழாவை நடத்தி, நான்கு நாட்களுக்குப் பின்தான் இப்படியொரு விழா நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எப்படி நீங்கள் அறிவுத் திருவிழா நடத்தலாம் என்று கேட்கிறார்கள். யாரை கேட்டு, எதற்காக நடத்துனீர்கள் என்று கேட்கிறார்கள். அறிவு இருப்பவன் அறிவுத் திருவிழா நடத்துகிறான். அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசிவிட்டோம் என்று கோபம் வேறு. எப்படி போலீஸை பார்த்தால், திருடர்களுக்குப் பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அதிர்ச்சி. அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது, கொள்கையற்ற கும்பலின் ஆபத்தைப் பற்றியும் இங்கே பேசியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 2026ல் நாம் வெற்றி பெற்றால், அது திமுகவின் வெற்றி மட்டும் கிடையாது, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்பதை மக்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


