Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உண்மையைத்தான் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பொதுச்செயலாளராக இருந்தால் அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி.தினகரன் ‘பளீச்’

மதுரை: உண்மையைத்தான் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின். எடப்பாடி பொதுச் செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நயினார் நீண்ட நாள் நண்பர். தனிப்பட்ட முறையில் கோபம், வருத்தம் இல்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டதற்கு தான் பதில் சொன்னேன். நல்ல நண்பராக எப்போதும் சந்திக்கலாம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருமையான கருத்தை கூறியுள்ளார். ‘‘எங்களது வெற்றியின் ரகசியமே எடப்பாடி தான். அவர் அதிமுக பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும். நூறாண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்கட்சி தலைவராக இருந்தால்தான், வெற்றி எங்களுக்கு சுலபம்’’ என்கிறார். கூட்டணி பலம் இருந்தாலும், எடப்பாடிதான் வெற்றியின் ரகசியம் என்பதை அவர் கூறியுள்ளார். இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள், இணைப்பை முன்னிறுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லியிருந்தாலும் உண்மை அதுதான். துரோக சிந்தனை உள்ளவர் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்பது தான் உண்மை. குறுகிய மனப்பான்மையுடன், சுயநலத்துடன் இரட்டை இலை, தொண்டர், பண பலம் இருந்தும் அந்த இயக்கம் தோற்க நாங்கள் காரணமல்ல. அவர் தான் காரணம் என்பதை அங்கே இருப்பவர்கள் உணர வேண்டும். அதை உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார். ஒன்றிணைக்க விரும்புவோர் இதை உணர வேண்டும். அமமுக துவங்கியது எதற்கு என தெரியும். எங்களை அழித்துக் கொண்டு தற்கொலை முயற்சிக்கு சமமான முடிவை நாங்கள் உறுதியாக எடுக்க மாட்டோம். எங்கள் வழி தனி வழி. எங்கள் கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் சுதந்திரமாக உள்ளோம்.

எடப்பாடியை தலையில் வைத்து ஆடுபவர்கள் திருந்த வேண்டும். அவருக்கு காவடி தூக்குபவர்கள் சொல்வது நடக்கப்போவது இல்லை. எடப்பாடி தலைமையில் என்ன முயற்சி செய்தாலும் தோல்வி என்பது உறுதி. இதை நான் தெளிவாக சொல்கிறேன். டெல்லி என்னை அழைத்து பேசினால், என்ன பேசினேன் என்பதை வந்து கூறுகிறேன். செங்கோட்டையன் மூத்த தலைவர், 2016ல் ஆட்சி அமைக்க நேரம் கேட்டபோது என்னுடன் இருந்தவர். அரசியல் அல்ல; வேறு காரணத்திற்காக ஜெயலலிதா, அவரை நீக்கியிருந்தார். கவர்னர் மாளிகையில் செங்கோட்டையன் பெயரை அமைச்சர் பட்டியலில் சேர்த்தது நான் தான். ஏனென்றால் அவர் மூத்த நிர்வாகி. அவர் எடுக்கும் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன். எடப்பாடி, இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடும் வரை, முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை வெற்றி என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கும். இது, தனிப்பட்ட விரோதம் அல்ல. யதார்த்தம் தான். இவ்வாறு கூறினார்.