*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உடன்குடி : உடன்குடி பேரூராட்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க ஊரணியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி ஊரணி ஒரு நீர்பிடிப்பு குட்டை ஆகும். இதில் ஆண்டுதோறும் மழைகாலங்களில் முழுமையாக நிரம்பினால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றில் கடல்நீர் உட்புகுந்து விடாமல் தடுக்கப்படும். மேலும் இப்பகுதியிலுள்ள தண்ணீர் உப்புநீராக மாறாமல் இருக்கும். அப்படிபட்ட இந்த உடன்குடி ஊரணியில் தற்போது காட்டு செடிகள், உடை மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.
மேலும் ஊரணியின் 4 பக்க கரைகளும் அழிந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைகாலத்திற்கு முன்பு ஊரணியை முழுவதும் சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி, கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாருவது அவசியம்:
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் நீரை நம்பி தான் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் முழுமையாக தண்ணீர் நிரம்புவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது.
எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஊரணியை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும், சிதிலமடைந்து காணப்படும் கரைகளை பலப்படுத்த வேண்டும். மழைக்காலத்திற்கு முன் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.