Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்ற வேண்டும்: 2014ல் வழக்கு...2017ல் தீர்ப்பு... வாதாடி வெற்றி பெற்ற எடப்பாடி அரசு தற்போது அந்தர் பல்டி பாஜவுடன் கூட்டணியால் நிலைப்பாட்டில் மாற்றம்

மதுரை மாவட்டம், திருவேடகம் அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த இடம் மோட்ச தீபம் ஏற்றும் பகுதியாகும். இந்தப் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே, இந்தப் பகுதியில் ஏற்றக் கூடாது எனவும், மலையின் மேல் பகுதியில் ஏற்றவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி வேணுகோபால் வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்து, மலையின் மேல் பகுதியில் தீபம் ஏற்ற உத்தரவிடுமாறு சுப்ரமணியன் மனு செய்திருந்தார். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 2017ல் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.கல்யாணசுந்தரம், வி.பவானி சுப்பராயன், ‘‘கோயில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும், முடிவெடுத்து பத்தாண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரங்கள் எதுவும் இல்லை. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் தேவையில்லை. எனவே, வழக்கமாக ஏற்றப்படும், உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை’’ எனக் கூறி அந்த மனுவை 07.12.2017ல் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்த போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக இருந்தார். அப்போது, அவரது அரசு தரப்பில் தான், ‘‘வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும். மற்ற இடத்தில் ஏற்ற அனுமதிக்க முடியாது’’ என வாதிடப்பட்டுள்ளது. இந்த வாதத்தின் அடிப்படையில் தான் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். அப்போது, தனது தலைமையில் அரசாங்கம் நடந்த போது சட்டம் ஒழுங்கு, நூற்றாண்டு வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற ஆட்சேபம் தெரிவித்து, வழக்கில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது திமுக ஆட்சி நடப்பதால் தனது அரசாங்கத்தின் போது எடுத்த முடிவிற்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது.

தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்து உள்ளதாலும், அதிமுகவின் குடுமி பாஜவின் கையில் சிக்கி உள்ளதால் பாஜ மற்றும் இந்து அமைப்பினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தர்கா அருகே தீபயேற்ற வேண்டும் என்று எடப்பாடி தெரிவித்து உள்ளார். ஒரே வழக்கு, ஒரே பிரச்னை, ஒரே விவகாரத்தில் தான் ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

* தர்கா அருகில்தான் ஏற்றுவோம் என அடம்பிடிப்பது ஏன்? ‘மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வேலை’

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறுகையில், ‘‘நீதிபதி தனது தீர்ப்பில் வீட்டில் கூட கார்த்திகை தீபம் ஏற்றுகிறோம் என்கிறார். ஏன் தர்கா அருகில் தான் தீபம் ஏற்றுவோம் என அடம்பிடிக்க வேண்டும்? அங்க நேரடியாக போக பாதை கிடையாது. தர்கா வழியாகத்தான் போகனும். தர்கா பகுதிக்குள் புகுந்து போகலாம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இல்லாவிட்டால் ஹெலிகாப்டரில் தான் போக வேண்டும். வேற வழியே கிடையாது. மற்றவர்கள் சொத்திற்குள் புகுந்து செல்ல முடியுமா? சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகாதா? இன்றைக்கு ஒன்றை சொல்வார்கள். நாளைக்கு அடுத்த வருடம் போடும் வழக்கில் எங்களை அனுமதியுங்கள் என்பார்கள். அதன்பிறகு எல்லோரையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்பார்கள். அது தான் அங்கு நடக்கப் போகிறது. மதநல்லிணக்கத்தை திட்டமிட்டு சீர்குலைக்கும் வேலையை நீதிமன்றம் அங்கீகரிக்குமா? இதை நீதிமன்றத்திலேயே கேட்டோம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவது, எது சரியானது என்பதை நீதிபதி எப்படி முடிவு செய்வார்’’ என்றார்.