இரு பள்ளி மாணவர்களிடையே மோதல் அரசு பள்ளி சுற்றுச்சுவரில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 இளஞ்சிறார்கள் உள்பட 4 பேர் கைது
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா ஊராட்சிக்கு உட்பட்ட சவலாப்பேரியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிசுற்றுச்சுவரில் நேற்று முன்தினம் 2 பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காளான் வளர்ப்பு கருத்தரங்கில் சவலாப்பேரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், வல்லநாடு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது வல்லநாடு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், சவலாபேரி மாணவர்களை சவலா, சவலா என கேலி செய்ததால் தகராறு ஏற்பட்டு இரு பள்ளி மாணவர்களும் தாக்கிக்கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் கண்டித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
பின்னர் இரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் வாகைகுளம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 4 பேர் வாகைகுளம் பஸ் நிறுத்தத்தில் நின்ற வல்லநாடு பகுதி மாணவர்களை தாக்க முற்பட்டனராம். ஆனால் அவர்கள் தப்பியோடி விட்டனர். ஆத்திரமடைந்த 4 பேரில் மூவர், சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் இரு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 இளம்சிறார்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
 
 
 
   