Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இரு ஹீரோக்கள்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக இருந்து வருகிறார். இருவருக்குள்ளும் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதல்வர் பதவிப்போட்டி நடந்து வருகிறது. இருவரது ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இவ்விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அமைச்சரவையில் மாற்றம் வரும் என்றும் முதல்வர் மாற்றப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் தனது முதல்வர் பதவியை தக்கவைத்து கொள்ள சித்தராமையா மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். டி.கே.சிவகுமாரும் தனது பங்குக்கு டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார். இதற்கிடையில் சித்தராமையாவை தேசிய அரசியலுக்கு அழைத்து கொள்ள கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் பிற்படுத்தப்பட்ேடார் பிரிவின் கூட்டம் டெல்லியில் நடந்த போது சித்தராமையா தலைமை தாங்கினார். அதே போல் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடக்கும் மூன்று நாள் கருத்தரங்கிலும் சித்தராமையா கலந்துகொள்கிறார்.

இதன் மூலம் தேசிய அரசியலுக்கு அவர் அழைக்கப்படுவார் என்று ேதான்றுகிறது. டி.கே.சிவகுமார் ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வௌிப்படையாக சித்தராமையாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட தொடங்கிவிட்டனர். சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டாண்டு சாதனை மாநாடு மைசூருவில் நடந்தது. இதில் தேசிய தலைவர் கார்கே பங்கேற்றார். ஆனால் டி.கே.சிவகுமார் பாதியில் மாநாட்டில் இருந்து வெளியேறினார்.

அப்போது முதல்வர் பேசும் போது, ‘கட்சி நிர்வாகி எழுந்து டி.கே.சிவகுமார் பெயரை நீங்கள் சொல்ல மறந்துவிட்டீர்கள் என்று நினைவு படுத்தினார்’. உடனே அவரை கடிந்து கொண்ட முதல்வர் சித்தராமையா, மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரது பெயரையும் சொல்லிவிட்டேன். வீட்டில் அமர்ந்திருப்பவர்கள் பெயரை சொல்ல முடியாது’ என்றார். இதனால் இருவருக்கும் இடையே இருக்கும் பதவி போட்டி வெளிப்பட்டது.

இதையடுத்து டெல்லி கர்நாடக பவனில் முதல்வர் சித்தராமையா செயலாளரை, டி.கே.சிவகுமாரின் செயலாளரை ஷூவால் தாக்கியது சர்ச்சையானது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை சித்தராமையா தனித்தனியாக சந்தித்து பேசிவருகிறார். அவர்களது தொகுதிக்கு தேவையான நிதி, வளர்ச்சி திட்டங்கள் குறித்து கேட்டு உடனடியாக நிறைவேற்றி வருகிறார்.

இதையடுத்து போட்டி கூட்டம் நடத்தும் வகையில், துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஒவ்வொரு துறை அதிகாரியையும் சந்தித்து வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில தலைவர் என்ற முறையில் எம்எல்ஏக்களுடனான சந்திப்பில் ஏன் டி.கே.சிவகுமார் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் இருவருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மேலும் ஆக.4ம் தேதி கர்நாடக மாநிலத்தில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டி ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் ராகுலிடம் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை பேச வைக்க இரு ஹீரோக்களும் முடிவு செய்துள்ளனர். ஆனால் முதல்வர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் தான் இறுதி முடிவெடுக்கும் என்று மூத்த நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.