இருநாடுகளுக்கு இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து சீன பொருட்கள் மீதான வரி 10% குறைப்பு: ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
தென்கொரியா: அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வந்தார். உலக நாடுகளுக்கு எதிராக அவர் கடுமையான வரிகளை விதித்தார். சீனாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வரிகளை உயர்த்தி உத்தரவிட்ட நிலையில், சீனாவும் பதிலடியாக வரிகளை அதிகரித்தது. இந்நிலையில் தென்கொரியா சென்றுள்ள அதிபர் டிரம்ப் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே புசான் நகரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர். சுமார் 1.40மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், பென்டானைல் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களை விற்றதற்காக சீனா மீது தண்டனையாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கும்.
ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்ல இருக்கிறேன். அதன் பின் அமெரிக்காவிற்கு ஜீ ஜின்பிங் வருவார். சீனாவிற்கு மிகவும் மேம்பட்ட கணினி சிப் ஏற்றுமதி குறித்தும் இருவரும் விவாதித்தோம். இது குறித்து சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விரைவில் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடும் என்றார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையானது சீனா மீதான மொத்த ஒருங்கிணைந்த வரி விகிதத்தை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கிறது.
* ரஷ்யா எண்ணெய் குறித்து விவாதிக்கவில்லை
தென்கொரிய மாநாடு மற்றும் சீன அதிபரை சந்தித்த பின் அமெரிக்கா திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘நீண்ட காலமாக சீனா ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்கிறது. அது சீனாவின் பெரும் பகுதிகளை பார்த்துக்கொள்கின்றது. மேலும் உங்களுக்கு தெரியும் அந்த வகையில் இந்தியா மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையில் ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் குறித்து இருவரும் விவாதிக்கவில்லை. அந்த போரை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதற்காக ஒன்றாக வேலை செய்வது குறித்து விவாதித்தோம்” என்றார்.
* டிக்டாக் பிரச்னையை இரு நாடுகளும் இணைந்து தீர்க்கும்
அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் சந்திப்பின்போது இந்த டிக்டாக் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று தெரிகின்றது. இந்த பிரச்னையை முறையாக தீர்ப்பதற்கு சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என்று சீனாவின் வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவிடம் இருந்து 2.5 கோடி மெட்ரிக் டன் சோயா பீன்
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நிகழ்ச்சி ஒன்றில், ‘‘சீன தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் 2.5கோடி மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்கள் வாங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
 
  
  
  
   
