Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையத்தில் சாலை அமைப்பதால், இரு வழியில் சென்ற வாகன போக்குவரத்து, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் மூலம், பள்ளிபாளையத்தில் கடந்த 2 வருடங்களாக, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நகரத்தின் முக்கிய பகுதியான பாலம் ரோட்டில், தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் திணறுகின்றனர். மேம்பால பணிகளில் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வந்த போதிலும் முழுமையடையவில்லை. சாலையோரம் நடைபாதை அமைப்பதற்காக, 4 மாதம் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலையோர கடைகள், வணிக நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் பலரும் வேறு இடத்திற்கு மாறினர்.

இந்நிலையில், நடைபாதை அமைக்காமலேயே நேற்று இந்த குழிகள் மூடப்பட்டது. சாலை கட்டுமான பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவால், போக்குவரத்தில் குளறுபடி ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கலெக்டர் உமா, நேற்று முன்தினம் நேரில் வருகை தந்து, பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு 3 மாதத்தில் விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். மேம்பாலம் தொடர்பாக ஈரோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையை, தார் சாலையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக காவிரி பழைய பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, புதிய பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றப்படும் எனவும், இந்த நிலை இம்மாதம் 30ம் தேதி வரை இருக்கும் என கலெக்டர் அறிவித்தார்.

இதன்படி நேற்று காலை, காவிரி ஆற்றின் பழைய பாலம் மூடப்பட்டு, தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. புதிய பாலத்தில் இருவழியாக வாகனங்கள் சென்று வர தொடங்கியது. காவல் நிலையம் எதிரே இருந்த இருவழிப்பாதையில் ஒரு வழி மூடப்பட்டது. ஏற்கனவே ஒருவழியாக செயல்பட்டு வந்த பாதை இருவழியாக மாற்றப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி அலுவலக நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்பாதையில் வழக்கமாக வந்து சென்ற வாகனங்கள் பல, குமாரபாளையம், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை வழியாக ஈரோடு செல்ல தொடங்கி உள்ளது. மேம்பாலம் அமைக்கும் பணியால் பள்ளிபாளையம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டை விழுந்த பாதாள சாக்கடை

காவிரி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் வகையில், சாலையின் ஒருபுறம் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதன் கட்டுமான பணியின் போது, சாக்கடையின் மூடி அமைக்கும் பகுதியில் காங்கிரீட் இடிந்து பிடிமானமற்ற நிலையில், அதன் மீது இரும்பு மூடி பொருத்தப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். அப்போதைக்கு செயல்பட்ட ஒப்பந்ததாரர், சாக்கடை மூடியை தற்காலிகமாக சரி செய்து தார் போட்டு மூடி விட்டார்.

தற்போது இந்த பாதை இருவழியாக மாற்றப்பட்டுள்ளதால், அதிகப்படியான வாகனங்கள் செல்லத் துவங்கியுள்ளன. நேற்று முதல் நாளே பாதாள சாக்கடையின் மூடிகள் உடைந்து விழுந்து, ஆபத்தான நிலையில் சாக்கடை திறந்துள்ளது. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் சாக்கடை பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபாயகரமான திறந்த நிலையில் உள்ள இந்த பாதாள சாக்கடையை புகைப்படமெடுத்த பலர், நிகழும் ஆபத்து குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.